கட்டுரை

தமிழக கூட்டணி கலாட்டா ஆரம்பம்

அரசியல் செய்தியாளர்

பெங்களூரு உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததிலிருந்து தமிழக அரசியல் காட்சிகள் குப்பென்று தலைகீழாக ஆகிவிட்டன. எப்படியும் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை உறுதிசெய்யப்படலாம். அதை அடுத்து உருவாகும் வெற்றிடத்தை எளிதாக தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ளலாம் என்று சில அரசியல்கட்சிகள் மனப்பால் குடித்திருக்கவேண்டும். ஆனால் நீதிபதி குமாரசாமியின் உபயத்தால் ஜெ. விடுதலை ஆனதைத் தொடர்ந்து பலருக்கு வேப்பெண்ணெய் குடித்ததுபோல் ஆகிவிட்டது.

 தன்னைப் ’போட்டு வாங்கிய’ மருத்துவர் அன்புமணி வீட்டுக்கும் மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கும் மு.க.ஸ்டாலின் தம் குடும்ப திருமண விழாவுக்காக அழைப்பிதழ் வைக்கப் போய்வந்தார். வைகோவைச் சென்று பார்த்தார். விஜயகாந்தைச் சென்று அழைத்தார். இவை அனைத்தும் மற்ற நேரங்களில் அரசியல் நாகரிகங்களாகக் கருதப்பட்டாலும் தேர்தல் நேரத்தில் இதற்கெல்லாம் வேறு பொருள் இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி மிக வினோதமான ஒன்று. முதல்முதலாக ஒரு மூன்றாவது அணி தேமுதிக தலைமையில் பாஜகவால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் வேறு சில கட்சிகளுடன் பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் சேர்ந்தன. அதிமுக இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிட விரும்பினாலும் பின்னர் இடதுசாரிகளைக் கழற்றி அம்போ என்று நட்டாற்றில் விட்டது. இதற்குக் காரணம் திமுகவால் வலுவான கூட்டணியை அமைக்கமுடியாததே.  காங்கிரசுடன் சேர்ந்தால் உள்ளதும்போய்விடும் என்று திமுக விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. இரு தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து நின்றது உதவிகரமாக இருக்கும் என்று அது நினைத்திருக்கலாம். ஆனால் ஜெ.வின் பக்கம்தான் காற்று வீசியது.  கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகள் தவிர்த்து ஒரு மெகா வெற்றியை 37 தொகுதிகளின் வெற்றியுடன் அவர் அடைந்தார்.

அதிமுக தவிர்த்த மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்தால்தான் அவரது செல்வாக்கை எதிர்கொள்ளமுடியும் என்பதே இப்போதைய நிலைமை. அவர் சிறையில் 21 நாட்கள் இருந்ததும் அதன் பின்னால் பிணையில் வீட்டுக்குள்ளேயே பலமாதங்கள் இருந்ததுமாக நிலையில்லாத அந்த நாட்களில் எந்த அரசியல்கட்சியும் எதையும் செய்து நல்லபெயர் வாங்கவோ செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவோ முயற்சிகூடச் செய்யவில்லை. விஜயகாந்த் மட்டும் காவிரிப்பிரச்னைக்காக ஓர் அனைத்துக்கட்சிக் குழுவுடன் டெல்லிக்குச் சென்று தன் இருப்பைக் காட்டிக்கொண்டார். அதில் பாமக இடம்பெற மறுத்துவிட்டது. டெல்லிக்குப் போய் பிரதமருடன் தனியாகப் பேசியதும், பத்திரிகையாளர் சந்திப்பில் வீராப்புக் காட்டியதும் அந்த முயற்சியையும் வீணடித்துவிட்டன.

இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகத்தான் ஸ்டாலினின் திருமணப் பத்திரிகை வழங்கும் பயணங்களைக் குறிப்பிடவேண்டும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேராததற்கு இடதுசாரிகளுக்கு என்ன காரணம் இருந்ததோ அது அப்படியே இருக்கிறது. இருப்பினும் மதவாத சக்திகளை எதிர்ப்பதற்காக அவர்கள் திமுக அணியுடனோ அதிமுக அணியுடனோ சேர்வார்கள். போன தேர்தலில் தங்களை நட்டாற்றில் விட்ட அதிமுகவுடன் அவர்கள் சேரமாட்டார்கள் என்றே கருதலாம்.  அப்படியெனில் தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட ஒரு அணியை திமுக அமைக்க வாய்ப்புகள் உண்டு. காங்கிரஸ் அல்லது தமாகாவை சேர்த்துக்கொண்டால் இந்த அணி இன்னும் வலிமை ஆகும். பாமக எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி சேராமல் அன்புமணியை முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நடிகர்களுக்கு வாய்ப்புத் தந்தீர்கள். மருத்துவருக்கு வாய்ப்புத் தாருங்கள் என்கிறது பாமக. ஆனால் தமிழக மக்கள் அப்படி திடீரென தங்கள் மீது பாசம் காட்டிவிடமாட்டார்கள் என்பதை ராமதாஸ் அறிவார். ஆகவே பாமகவின் நிலைப்பாடு கடைசிவரைக்கும் இழுத்துச் செல்லப்படும்.

அதிமுக?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடெங்கும் மோடி அலைவீசியபோதும் தமிழ்நாட்டில் ஜெ. அலை வீசியது. பெங்களூரு நீதிமன்ற அலைக்கழிப்புக்குப் பின்னர் இந்த அலையின் வீச்சு அதிகரித்திருப்பதாகவே அதிமுகவினர் கருதுகின்றனர். எனவே அவர் இம்முறையும் தனியாக நின்று தேர்தலைச் சந்திக்கவே விரும்புவாரென்றே கருதப்படுகிறது. போன சட்டமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிடவே விரும்பியதாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று விரும்பியதாலேயே தான் ‘தகுதியற்ற’ தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அவர் சீறியதை மறக்கவேண்டாம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உருவாக்கிய சிறிய கட்சிகளின் கூட்டணி வலுவானதாகவே அமைந்திருந்தது. அதுபோன்றதொரு மூன்றாவது அணி இத்தேர்தலில் அமையும் என்பது சாத்தியமில்லை. ஏனெனில் அப்படியொரு அணியை அமைக்கப் பாடுபடும் நபர்கள் யாரையும் இன்றையச் சூழலில் அடையாளம் காணமுடியவில்லை. தமிழருவி மணியன்கூட போங்கப்பா என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டார்!

பாஜக டெல்லியில் அதிமுகவுடன் நல்லுறவு. தமிழ்நாட்டில் எதிரணி என்ற நிலைப்பாட்டில் இந்நேரத்தில் உள்ளது. ஆனாலும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்புவரை அதிமுகவை விமர்சித்த பாஜக தமிழகத்  தலைவர்கள் அவர் விடுதலை என்றதும் உடனே பிளேட்டைத் திருப்பிப் போட்டு அதிமுக தொண்டர்கள் போல் பேசியது என்னமாதிரி அரசியல் தந்திரம் என்று அரசியல் நிபுணர்கள் ஆலோசித்து ஓய்ந்துபோனார்கள்.

பாஜகவுடன் கூட்டணிவைத்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதை திமுக- அதிமுக இரு கட்சிகளுமே அறியும் என்பதால் அக்கட்சியுடன் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சிகள் கூட்டணி வைக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் பாஜக, தமாகா ஆகிய இருகட்சிகளுமே அதிமுகவுடன் சேரும் வாய்ப்பும் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

திமுக அணியில் தேமுதிக சேரவேண்டுமானால் அதற்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும்; மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் தரவேண்டும் போன்ற கூட்டணி முறுக்கல்கள் இனி மெல்ல ஆரம்பமாகும்!

இனிவரும் மாதங்கள் சுவாரசியமானவை.

ஜூன், 2015.